புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?

புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?
Published on

மாண்புமிகு முதல்வருக்கும் புதிய அரசுக்கும் அந்திமழையின் வாழ்த்துகள்!

தமிழகத்தை மேம்படுத்த புதிய அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று ஒரு நிபுணர் குழுவின் கட்டுரைகள் அடங்கிய சிறப்பிதழை, ஏப்ரல் மாத இதழில் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக  விரிகிறது இந்தக் கட்டுரை.

 ‘ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஏற்றத் தாழ்வு நிலவுகிறது என்ற உண்மையான  கவலை, அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களின் மனதிலும் இருக்கிறது. ஒரு பக்கச் சார்பான வளர்ச்சியால், நாம் இந்த நாட்டின் அதிகபட்ச உற்பத்தியைப் பெறத் தவறிவிட்டோம் என்பதற்காகவே சுட்டிக் காட்டுகிறேன்!' இது, பேரறிஞர் அண்ணா,  ஜூன் 1962 இல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

நாட்டின் ஏற்றத் தாழ்வுகள் உள்ளது போல் மாநிலத்திற்குள்ளும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளது. கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு முதன்மையான காரணம், தொழில்களும் நிறுவனங்களும் ஒருசில நகரங்களைச் சுற்றி அமைக்கப்படுவது தான். தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தொழில் நிறுவனங்கள் அமையும் போது, முழுமையான வளர்ச்சி சாத்தியம் ஆகும்.

 தமிழகத்தின் முக்கியத் தேவை, நிதி ஆதாரங்களைப் பெருக்குவது. தமிழகத்தின் வருமானத்தை ஈட்ட இங்கே நிலைகொண்டுள்ள  தொழில்களை விரிவுபடுத்தலாம். குறிப்பாக தமிழகத்தின் கடற்கரை நீளம் 1076 கி.மீ. ஆந்திராவின் கடற்கரை நீளம் 975 கி.மீ.  2010-11 இல் ஆந்திரா, இந்தியாவின் இரண்டாவது அதிக மீன் பிடிக்கும் மாநிலமாக (13,68,202 டன்) இருந்தது.  தொடர்ச்சியான மாநில அரசின் உதவியால் 2018 -19இல் 39,92,360 டன்  மீன் உற்பத்தி செய்கிறது. தமிழகத்தின் நிலை 2010 -11இல் 6,14,809 டன், 2018-19இல் 7,30,670 டன் மட்டுமே. மீன்வளத்துறை, இதில் கவனம் செலுத்துவது அவசியம்.

2019-20 பட்ஜெட் கணக்கீட்டின்படி தமிழகம் 35,374 கோடி வட்டியாகக் கட்டுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சேர்த்து 3,54,800 கோடி தான் வட்டி கட்டுகின்றன.  2010-11-இல் இருந்த நிலையை விட 4.8  மடங்கு நாம் கட்டும் வட்டி கூடியிருக்கிறது. கடன்களை சீரமைத்து வட்டி விகிதங்களைக் குறைத்தால் அது பெரும் சேமிப்பு.

பெரிய அளவிலான விமானங்களை கோவை விமான நிலையத்திற்கு விமான நிறுவனங்கள் இயக்குவதில்லை. அதற்கான கட்டமைப்பு இல்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் பிரசா ரத்திற்கு பிரதமரின் பெரிய விமானம் கோவை வந்தது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், கோவைக்கு வரும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகும், தொழில் வளரும்.

ஓசூருக்கு அருகில் உள்ள  பெல்லகொண்டபள்ளியில் உள்ள விமான நிலையத்தையும் சென்னைக்கு அருகில் உள்ள சோழவரத்திலிருக்கும் விமான நிலையத்தையும் வர்த்தக விமானப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால், தமிழகத்தின் பொருளாதாரம் உயரும்.

தமிழகத்தின் பாசன நிலப்பகுதிகள் குறைந்து வருகிறது. இதைத் தடுப்பதற்கான சட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க ஆர்கானிக் விவசாயம் ஒரு சரியான வழி. தமிழகத்தில் உள்ள வேளாண்  பல்கலைகள் உதவியுடன் இயற்கை வேளாண்மை பற்றிய தகவல்களை பரவலாக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பின்மை தமிழகத்தில் அதிகமாக உள்ளது.

இதைத் தீர்ப்பதற்கான ஒரு வழி, தொழில் முனைவோர்களை அதிகம் உருவாக்குவது. புதியவர்கள் தொழில் தொடங்குவதற்கான சூழலை தமிழகத்தில் உருவாகுவதும் அவசியம்.

பட்டதாரிகளும் தொழிற்கல்வி கற்றவர்களும் தமிழகத்தை இன்றைய நிலைக்கு அழைத்து வந்துள்ளனர். அடுத்த கட்டத்திற்கு தமிழகம் உயர்வதற்கு மிகப்பெரிய தொழில்முனைவோர் கூட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம்!

இத்துடன் எமது வாசகர்கள் முன்வைத்துள்ள ஆலோசனைகளில் தேர்வு செய்யப்பட்டதை வழங்குகிறோம்.

தமிழகம் வளரட்டும்...

புதிய கட்டுமானங்கள்

1. நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குளத்தை மூடி வீடு கட்டக் கூடாது

2. அரசு விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக் கூடாது.  பழைய குடியிருப்புகளை அதன் கட்டுமான தரத்துக்கேற்ப கால முறையில் இடித்து, புதிய கட்டுமானங்கள் உருவாக்க வேண்டும்.

3. தனியார் மருத்துவமனைகள் வாரத்தில் ஒரு நாள் ஏழைகளுக்கு இலவசமருத்துவ சேவை ஆற்ற வேண்டும்

4. தனி மனித ஒழுக்கத்தால் நிறைய முதியோர்கள் பெருகிவிட்ட நிலையில், அவர்கள் கவனிப்புக்கு சரியான வழி காட்டுதலுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் (முதியோர் நலன் காக்கும் மருத்துவர் வ.செ. நடராசன் குழுவினர் வழிகாட்டுதலுடன்)

- ம. ஆறுமுகம், திருநெல்வேலி

முன்னுரிமை

1. ஆண்டுக்கணக்கில் காலியாக இருக்கும் இடங்களில் புதிய பணியாளர்களை நியமிப்பது அவசியம்.

2. பொதுப்பட்டியலிலிருந்து ’கல்வி’ மாநிலப் பட்டியலுக்கு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

3. அரசுப் பள்ளிகளில் போதிய வசதியின்மை, தரமின்மை போன்ற காரணங்களால் தனியார் நடத்தும் மெட்ரிகுலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் சூழலை அடியோடு மாற்றியமைப்பது நல்லது.

4. மாணவர் முன்னேற்றத்திற்கு உதவக் கூடிய உயர் கல்வித்துறை உயர, உயர்ந்த கல்வியாளர் ஒருவரைத் தேர்வு செய்து கல்வி அமைச்சராக நியமிப்பது காலத்தின் கட்டாயம்.

5. தமிழகத்தில் செயல்படும் அரசு, தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை.

-நவீன் குமார், நடுவிக்கோட்டை

சிக்கனம் தேவை!

கடன் சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் அரசு சிக்கன நடவடிக்கை மூலம் கடன் சுமையை குறைக்க முயற்சிக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் ஆடம்பர அரசு விழாக்களை தவிர்க்க வேண்டும். துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்தபின் ஒவ்வொரு ஆண்டும் செலவை குறைத்து ஒதுக்கீடு செய்த தொகையில் செலவு போக மீதி தொகையை அரசுக்கு சரண்டர் செய்யலாம். அவ்வாறு சரண்டர் செய்யும் துறைக்கு பாராட்டி பரிசு வழங்கலாம்.

நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறிப்பிட்ட காலம் வரையில் பழுதாகாமல் இருக்க வேண்டும். பழுது ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். விவசாய விலைபொருள் உரிய ஆதார விலை கொடுக்க உத்தர வாதம் தரலாம். மழைக்காலங்களில் தானியங்கள், மலர்கள், காய்கறிகள் போன்றவற்றை சேமித்து வைக்க அரசாங்கமே மாவட்டத்திற்கு ஒன்று என குளிர் சாதன வசதி கொண்ட சேமிப்பு கிடங்குகளை அழைத்து விவசாயத்திற்கு வாடகைக்கு விடலாம்.

மழை நீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடிநீர் உயரச் செய்யலாம். நெடுஞ்சாலைகளில் வீணாகும் மழைநீரை சேமிக்க சாலையின் அருகே குளங்கள் போன்று அமைத்து தென்னக நதிகளை இணைக்க அண்டை மாநிலங்களுடன் உரிய அணுகுமுறையோடு முயற்சிகள் மேற்கொள்ளலாம். போக்குவரத்து துறையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் ஓரளவிற்கு சிறப்பாக இருப்பினும் இன்னும் பல கிராமங்களுக்கு போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளது. மேலும் வசதிகள் செய்து அரசு போக்குவரத்து துறையை லாபகரமான துறையாக மாற்ற முயற்சிக்கலாம். தனியார் துறையினர் அதிக லாபம் பெறுகின்றர். அரசு போக்குவரத்து துறையை ஊக்குவிக்கலாம்.

தமிழ்நாட்டில் கல்வித்துறையில் தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன, இருப்பினும் அரசு பள்ளிகளில் தரம் உயர போதிய வசதிகள் செய்தால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். பல்வேறு இலவசங்களை அரசு செய்தாலும் பல பள்ளிகளில் கட்டட வசதி, கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்றவைகள் இல்லாமல் உள்ளன. விளையாட்டை கட்டாயப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தை அமைக்க வேண்டும். இவை அனைத்தும் நிர்வாக சீர்திருத்தங்களே அன்றி நிதிச் செலவு இல்லை.

கே..மாரியப்பன், தர்மபுரி

சட்டமேலவை!

1. பல வருடங்களாக இன்றைய தலைமுறைக்கு என்னவென்று தெரியாத சட்ட மேலவை அமைக்கப்பட வேண்டும்.

2.   மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படாமல், அதே நேரத்தில் மத்திய அரசின் ஆக்கபூர்வமான நலதிட்டங்கள் கிடைக்கும் வகையில் புதிய அரசு செயல்பட வேண்டும்.

3.  சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கம் மருத்துவச் செலவிற்கு தங்களின் உழைப்பினை செலவழிக்க வேண்டிய சூழல் இருப்பதால் பிற இலவசங் களை விட இலவச மருத்துவம் கட்டாயம்.

4. தலைநகர் சென்னைக்கு தினமும் அலுவல் பணி வேலையாக ஆயிரக் கணக்கில் மக்கள் செல்ல வேண்டியது இருப்பதால், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலேயே அரசு ஊழியர்கள் தங்கள் துறைரீதியான பணிகள் அனைத்தையும் நடைமுறை செய்தால் தலைநகர் தேவையற்ற கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்கும்.

5. 39 மக்களவைத் தொகுதியினை நம் தமிழகம் கொண்ட நிலையில் அந்தந்த தொகுதியின் பெயரிலேயே மாவட்டங்கள் அமைந்தால் பல விதங்களில் நிர்வாகக் குழப்பம் ஏற்படாது. மேலும் ஓரு கோடி ஜனத் தொகையினை சென்னை மாவட்டம் கொண்டுள்ளதை மாற்றி தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என உருவாக்கினால் நிர்வாக வசதிக்கு ஏதுவாக இருக்கும்.

6. அரசின் எந்த ஓரு திட்டமாக இருந்தாலும் சரி, எந்த ஓரு துறை விழாவாக இருந்தாலும் சரி முதல்வரே ஆனாலும் கூட அவற்றினை வீடியோ கான்பரன்ஸ் வழியே மேற் கொண்டால் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கும்.

7. அரசு ஊழியர்கள் ஓய்வு வயதினை அறுபதாக உயர்த்தியதை மறுபரிசீலனை செய்து வேலையற்ற இளைய சமுதாயத்திற்கு வழிவிட அரசாணை வெளியிடலாம்.

8. தவிர்க்க முடியாமல் இடைத் தேர்தல் நடக்கும் விதத்தில் அந்த இடைத்தேர்தல் தொகுதி எந்த மாவட்டத்திற்குள் வருகிறதோ அந்த எல்லைக்குட்பட்ட கட்சி பிரமுகர் மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்ய வைக்க வேண்டும்.

9. கருத்து சுதந்திரம் முக்கியம் என்பதால் சினிமா, பத்திரிகை, நாளிதழ் உள்ளிட்ட மக்கள் தொடர்பு சாதனங்கள் மீது தேவையற்ற வழக்குகள் பதிய வேண்டாம்.

10. அரசுத் துறையில் ஏ, பி, சி கிரேடு ஊழியர்கள், பெரும் செல்வந்தர்கள் மற்றும் இதனுடன் இணையும் குடும்பங்கள் ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு, அரசின் பொருட்கள் மற்றும் இதர வகைகள் சரியான சாமான்ய நடுத்தர மக்கள் பலன் அடையும் விதமாக மாற்றி, அவரவர் வீடுகளுக்கே பொருட்கள் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

சி. கார்த்திகேயன், சாத்தூர் - 626203.

குத்தகை வருவாய்!

· கையளவு நிலத்தை வாங்குகிற ஏழைக்கு பதிவாளரால் பதியப்படும் ஆவணம்தான் அவனது தன்மானம். பதிவுகளின் போதே விற்றவரின் உரிமை பட்டா அனைத்தும் வாங்குபவர்களுக்கு சேர்த்து விடுகிறது. வாங்கியவர் விற்கும் போதும் மீண்டும் பட்டா கேட்பது தவறானதாகும். ஒரு சொத்திற்கு ஏற்பட்ட பட்டா திரும்பத் திரும்ப மாறுதல் செய்து புதிது புதிதாக பட்டா வழங்குவதை நிறுத்த வேண்டும். புதிய புதிய பட்டாவால் ஏற்படும் தாமதம் தவிர்க்கலாம். பதியப்பட்ட ஆவணத்தை பட்டாவாக கருதி மக்களை அலைச்சல் இன்றி ஆக்கிவிடலாம்.

· அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேய்ச்சல் தரை, சத்திரம் சொத்துக்கள், கோவில் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட நிலங்கள் (ஆடு மாடு தாவணி சொத்துகள்) குட்டை ஊரணி நிலங்கள் காணாமல் போய்விட்டது. இதனால் ஏற்பட்டுள்ள குத்தகை வருவாய் முற்றிலும் அரசின் வருமானத்தில் இல்லை. தற்காலத்தில் பேணப்படும் அடங்கல் பதிவு பதிவுகளை பழைய ஆவணங்களுடன் ஒத்துப் பார்த்து கணக்கில் கொண்டு வந்து அரசின் வருவாயைப் பெருக்கிவிடலாம்.

- பொன்பரமானந்தம், எட்டையபுரம்

வெளிப்படை ஒப்பந்த பேரம்!

· பெட்ரோல், டீசல், மதுவால் மட்டுமே வரி வசூலிக்கும் மாநில அரசு பெட்ரோலுக்கும் (ரூ.100) மானியம் கொடுத்தால் ரூ.7 லட்சம் கோடி கடனோடும், பற்றாக்குறை பட்ஜெட் போடும், தள்ளாடாதா? வரிகளை மட்டுமே நம்பாமல், மணல், கிரானைட், தாது மணல் விற்பனையை அரசுடைமையாக்கலாம்.

     சாலைகள் தோறும் தேர்தல் நேர வேட்டையில், கணக்கில் காட்டாத கருப்பு பணம் நிறைய சிக்குகிறதே! வருமான வரித்துறை இதையே நிரந்தர பணியாக்கலாம். இது போல, அரசு வருவாயைப் பெருக்க வழி காண்பது தான், புதிய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.

· நீர் நிலைகளைப் பாதுகாக்கவும், நதிகளை இணைக்கவும், மழை நீரை சேமிக்கவும் அரசு நிஜமான நடவடிக்கை எடுப்பது வேளாண்மையை வாழவைக்கும். அதுவே 40% மக்களின் வாழ்வாதாரத்தையும் பெருக்கும்.

· தனி மனித தரம் குறையவும், ஏழைக் குடும்பங்கள் சீரழியவும், சமூக சீர்கேடுகளும்,சாலை விபத்துகளும் பெருகவும் மதுவே காரணம் என்பது வேதனையான உண்மை. மதுபானம் தரும் வருமானம் அரசுக்கு அவமானம் என்று உயர்நீதி மன்றமே கண்டித்த பிறகும், எந்தக் கட்சியும் பூரண மது விலக்கை வாக்குறுதியாக வழங்காதது, வருத்தத்திற்குரிய ஏமாற்றம்.

(ஆட்சியில் சேராத காங்கிரஸ் தவிர) பூரண மதுவிலக்கை ஓராண்டுக்குள் படிப்படியாக நிறைவேற்றுவதே, அரசின் தன்மானம் காக்கும் காலக் கட்டாயம். (டாஸ்மாக் இருந்த இடத்தை குடிமகன்கள் மருத்துவச் சிகிச்சை மையமாக மாற்றலாம் )

· போக்குவரத்து முதல் காதி கிராஃப்ட் வரை அரசுத் துறை என்றாலே நஷ்டத்தில் இயங்குவதற்கு ஊழலே பிரதானம். இரும்புக்கரம் கொண்டு இதைச் சரி செய்தாலே போதும். டாஸ்மாக்கை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டலாம்.

· சமூக சீர்கேடுகள் பெருக காவல்துறை கருப்பு ஆடுகளால் களங்கப் பட்டதே காரணமாகும். காவல் துறையினரின் வருவாயைப் பெருக்கி, வார விடுமுறையுடன், பணி நேரத்தை நிர்ணயிப்பதுடன் முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். அரசு அலுவலகம் நீதி, காவல் துறையில் அரசியல் தலையீட்டை வன்மையாக தடுக்க வேண்டும்.

· எம்.எல்.ஏ.,  அமைச்சராக தேர்வானவர்கள் எந்த கட்சிப் பதவியிலும் இருக்கக் கூடாது. எம்.எல்.ஏ அமைச்சர் என்பதும் அரசுப்பணியல்லவா? (அரசு அலுவலர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாதே!) அத்துடன் சொந்தக்கட்சி கூட்டங்களிலும் ஜாதி மத விழாக்களிலோ பங்கேற்கக் கூடாது. சமூகத்திற்கு பொதுவானவர்களாக திகழ வேண்டும்.

· எம்.எல்.ஏக்கள் தொகுதியில் தங்களுக்கென அமைந்த அலுவலகத்தில் தினமும் கட்டாயம் காலை முதல் மதியம் வரை மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்க வேண்டும். இதற்கான பதிவேட்டைத் தலைமைச் செயலகம் அல்லது சபாநாயகர் நிர்வகிக்க வேண்டும்.

· சட்டமன்ற செயல்பாட்டிலும் சீர்திருத்தங்கள் அவசியம். வெளிநடப்புகளை அனுமதிக்கக் கூடாது. கூட்டத்தொடரில் எம்.எல்.ஏக்கள் தொகுதிப்பிரச்சனைகளை மட்டுமே பேசுவதற்கென தனியாக சில நாட்கள் ஒதுக்க வேண்டும் அதில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றுக் குறிப்பெடுத்து, அடுத்த கூட்டத்தில் மேல் நடவடிக்கை பற்றி விவாதிக்க வேண்டும்.

· தனியார் பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கைகளையும், ஆதிக்கத்தையும் குறைத்து, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த வேண்டும். அது போல மக்கள் விரும்பி நாடி வரும் அளவுக்கு அரசு மருத்துவமனைகளையும் நவீனமாக்க வேண்டும்.

· அரசு ஒப்பந்தங்களால்தான் ஆளும் கட்சியினர் கொழிக்கிறார்கள். இதைத் தடை செய்ய வேண்டும் வெளிப்படையான ஒப்பந்த பேரம் மூலம், தரமான தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

- அண்ணா அன்பழகன்

மே 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com